தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
கரோனா பரவலைத் தடுக்கதமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், 5-ம் கட்டமாக ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
வகை 1-ல் இடம் பெற்றுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு,சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நகை,துணிக் கடைகள் தவிர மற்றகடைகள் இரவு 7 மணி வரைசெயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன் கடைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி,தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாகபாத்திரக் கடைகள், பேன்சி, அழகுசாதன கடைகள் உள்ளிட்ட கடைகள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
துணி, நகைக் கடைகள் திறப்பு
இந்த மாவட்டங்களில் துணி மற்றும் நகைக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். அத்துடன் 23 மாவட்டங்களிலும் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம்.
வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்கெனவே கடந்த 21-ம் தேதி முதல்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த 4 மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வாக இன்றுமுதல் அனைத்து துணி, நகைக் கடைகள், வணிக வளாகங்கள் காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன. ஆனாலும் அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
பொதுவான தளர்வுகள்
அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். வகை 2 மற்றும் 3 மாவட்டங்கள் இடையே இ-பதிவு இன்றி திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்லலாம். வகை 1-ல் உள்ள மாவட்டங்களில் இருந்து 2, 3 வகை மாவட்டங்களுக்கும், அங்கிருந்து வகை 1 மாவட்டங்களுக்கும் திருமண நிகழ்வுகளுக்கு செல்ல இ-பாஸ் அவசியம்.
டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தினாலும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கண்காணிப்பு குறைப்பு
ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சாலைகளில் போலீஸாரின் வாகன சோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில வாகனங்களைமட்டுமே நிறுத்தி சோதனை செய்துவருகின்றனர். முக்கிய சாலைகளில் மட்டும் வழக்கமான சோதனைகள் தொடர்கின்றன. வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் இயக்கம்
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் வரும் 1-ம் தேதி முதல் பயணிகளின் தேவைக்கு ஏற்ப ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறும்போது, ‘‘ஊரடங்கில் தளர்வு அளித்துள்ள இடங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராகி வருகிறோம். ஒரு சிலர் இன்றுமுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கினாலும், வரும் 1-ம் தேதிக்கு பிறகே பயணிகளின் தேவைக்கு ஏற்ப ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளோம்’’ என்றார்.