வீரேந்திர ராவத் 
தமிழகம்

சென்னை உள்பட 21 இடங்களில் ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் கொள்ளை: தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கும்பலை சேர்ந்த இளைஞர் ஹரியாணாவில் கைது

செய்திப்பிரிவு

சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த நபர், தான் கொள்ளையடித்த பணத்தில் ஹரியாணாவில் சொகுசு வீடு, நிலங்கள் வாங்கி குவித்த தகவல் வெளியாகி உள்ளது. இவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறி வைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. அதாவது, எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் வசதி கொண்ட சிடிஎம் இயந்திரங்களை குறி வைத்து ஒரே பாணியில் கடந்த 15-ம் தேதியிலிருந்து 18-ம்தேதிக்குள் அடுத்தடுத்து சுமார் ரூ.1 கோடி வரை சுருட்டியுள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்க தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் மேற்பார்வையில் தியாகராய நகர் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஹரியாணா மாநிலம், பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், அவரை 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர் எஸ்பிஐ வங்கிஏடிஎம்-ஐ குறிவைத்து கொள்ளையடித்து எப்படி என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர், தங்களது குடும்பம்பாரம்பரியமாக கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளதாகவும், நிலங்களை வாங்கி குவித்துள்ளதாகவும், கால்நடை வளர்ப்பு பணியில் ஈடுபட்டதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், தனது கூட்டாளி குறித்தும் தெரிவித்த தகவலின்பேரில் ஹரியாணா, பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த வீரேந்திர ராவத் என்ற மற்றொரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை தனிப்படை போலீஸார் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

ஹரியாணாவில் தேடுதல் வேட்டை

இதற்கிடையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களை கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் ஹரியாணா மற்றும்டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அமீரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வீரேந்திர ராவத்தும் உறவினர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொள்ளை யில் ஈடுபட்ட இருவரும் அரும்பாக்கத்தில் உள்ளதங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் ஏடிஎம் இயந்திரம் சென்னையில் எங்கெங்கு உள்ளது என தெரிந்து கொண்டு அதன்மூலம் கொள்ளையில் இறங்கியுள்ளனர்.

இதற்காக கோடம்பாக்கத்திலிருந்து இணையதள செயலி மூலம் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாது என்பதால் ரூ.20 லட்சத்தை தரமணியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் பணம் செலுத்தும் இயந்திரம் (சிடிஎம்) மூலம் ஹரியாணாவில் உள்ள தனது தாயாரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அமீரின் வங்கி கணக்குகளை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் முடக்கியுள்ளனர்.

தொடர் குற்றங்கள்

எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த கும்பல், சென்னையில் 15 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 குற்ற நிகழ்வுகளிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு குற்ற நிகழ்விலும் ஈடுபட்டுள்ளனர்.

இக்கும்பல் தமிழகம் முழுவதும் மொத்தம் 21 இடங்களில் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

7 பேர் தலைமறைவு

மேலும், இந்த கொள்ளையில் மொத்தம் 9 பேர் ஒரே குழுவாக, ஒரு நபரின் தலைமையின்கீழ் செயல்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளைக் கும்பல் தலைவன் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 7 பேரை தொடர்ந்து தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT