தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
தமிழக தொல்லியல்துறை சார்பில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல்கட்ட அகழாய்வும் நடைபெற்று வருகின்றன. தொல்லியல்துறை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
சிவகளை அகழாய்வில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் இருந்தன. இவற்றில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளன. 10 முதுமக்கள் தாழிகள் பெரிய அளவில் உள்ளன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் 2 அடி முதல் 4 அடி உயரம் உள்ளன. இதுதவிர பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துகளும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.