கரோனா தொற்றால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ‘ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றாலும், தொடர்ந்து முழுக்கட்டணத்தையே செலுத்துமாறு தனியார் பள்ளிகள் வற்புறுத்துகின்றன. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு கட்டணத்தை முழுவதுமாக செலுத்த முடியவில்லை. நடப்புக் கல்வி ஆண்டிலும் இதேநிலை தொடர்வதால் பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.
“தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு மின் கட்டணம், பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் பெருமளவு மிச்சமாகியுள்ளது. பல பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளை சில ஆசிரியர்களைக் கொண்டே நடத்துகின்றனர். அவர்களுக்கும் பாதி ஊதியமே தருகின்றனர்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நோட்டுகளையே மாணவர்கள் பயன்படுத்தாத நிலையில், நடப்பு ஆண்டிலும் வாங்குமாறு பெற்றோரை நிர்பந்திக்கின்றனர்” என்கிறார் கல்வியாளரும், சமூக ஆர்வலருமான திருஅரசு. இந்த நெருக்கடியால் பெற்றோர் பலர் அரசுப் பள்ளிகளை நோக்கி நகருகின்றனர்.
இதற்காக மாற்றுச் சான்று கேட்டு சென்றால், திறக்கப்படாத கடந்த கல்வி ஆண்டின் முழுக் கட்டணத்தையும் செலுத்துமாறு தனியார் பள்ளிகளில் வற்புறுத்துகின்றனர். சில தினங்களுக்கு முன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்புக்காக மாற்றுச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பெற்றோரிடம், ‘பள்ளி நிர்வாகம் முழுக் கட்டணத்தையும் செலுத்தினால்தான் தருவோம்’ எனக் கூறியுள்ளனர். இப்பிரச்சினையை சரிசெய்யும் வகையில், “8-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் அவசியமில்லை” என்று பள்ளிக்கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்டபோது, “தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதைச் செலுத்தி மாற்றுச் சான்று பெறலாம்” என்றார். இதற்கிடையே கிராமங்களில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க, ஆசிரியர்கள் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். “9 முதல் 12-ம் வகுப்புவரை மாற்றுச் சான்று இல்லாத நிலையில், ‘பிறகு மாற்றுச் சான்று பெற்றுத்தர வேண்டும்’ என கூறி சேர்க்கை நடத்துகிறோம்” என்கிறார் நடுவீரப்பட்டு அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி.