அஞ்செட்டி வட்டம் கடமகுட்டை மலைக்கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அண்மையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற மலைவாழ் மக்கள். 
தமிழகம்

அஞ்செட்டி அருகே கரோனா பாதிக்காத மலைக் கிராமம்: பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

அஞ்செட்டி வட்டம் கடமகுட்டை மலைக் கிராமத்தில் இதுவரையில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லாத நிலையில், அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அஞ்செட்டி வட்டம் பெட்ட முகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கடமகுட்டை மலைக்கிராமத்தில் 50 பழங்குடியின குடும்பத்தினர் வாசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத் துக்காக அங்குள்ள 200 ஏக்கர் விவசாய நிலத்தில் கேழ்வரகு, வேர்கடலை, கிழங்குகள் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

சாலை வசதி இல்லாத இக்கிராமத்துக்கு செல்ல கற்கள் நிறைந்த கரடு முரடான மலைப்பாதையில் செல்லவேண்டும். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மாதம் ஒருமுறை உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி கிராமத்துக்கு செல்கின்றனர். அங்கிருந்து கடமகுட்டை மலைக் கிராமத்துக்கு 3 கிமீ தூரம் கால்நடையாக மலைப் பாதையில் மருத்துவ உபகரணங்களை சுமந்தபடி நடந்து செல்கின்றனர். மேலும், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மக்களை வரவழைத்து மருத்துவச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முகாமில், கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. முகாமுக்கு வரமுடியாமல் வீட்டில் இருப்பவர்களையும் தேடிச் சென்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.

கடந்த ஆண்டு முதல் இக்கிராமத்தில் மருத்துவக் குழுவினர் கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், இக்கிராமத்தில் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது, மருத்துவக் குழுவினர் மலைக் கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT