ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் `இந்து' என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, கடந்த 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு அளித்த பதில் உரையில், ``கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்'' என்று அறிவித்து, ஜனநாயகத்தின் அடிநாதமான பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்காக தங்களது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், "கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பில் தமிழகம் நாட்டுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்றால், ஊடக சுதந்திரத்துக்கும் அதில் பெரும் பங்கு இருக்கிறது. அதைப் பேணும் அரசியல் மரபில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதால், நீங்கள் இந்த நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள்'' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஊடகத்தினரின் நலன் பேணப்படும்'' என்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினரிடம் உறுதி அளித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் அதன் நிர்வாகிகள் சந்தித்து, சுற்றுச்சூழலைக் காக்க அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.