தமிழகம்

கோயம்பேடு மார்க்கெட்டில் ஜனவரி 8 முதல் பொங்கல் சிறப்பு சந்தை: டிசம்பர் 30-ம் தேதி ஏலம் நடக்கிறது

செய்திப்பிரிவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை ஜனவரி 8-ம் தேதி தொடங்குகிறது. வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம் டிசம்பர் 30-ம் தேதி நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் பொங்கல் சிறப்புச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மண் பானை, வாழை இலை உள்ளிட்ட பல்வேறு படையல் பொருட்கள் விற்கப்படும். இந்த ஆண்டுக்கான சிறப்பு சந்தை 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ மார்க்கெட் பின்புறம் உள்ள காலி இடத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொங்கல் சிறப்பு சந்தையில் கடை வைக்கும் வியாபாரிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மார்க்கெட்டினுள் நுழையும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் டிசம்பர் 30-ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கு குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.7 லட்சத்து 71 ஆயிரத்து 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், டிசம்பர் 30-ம் தேதி 2 மணிக்குள், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்துக்கான வரைவோலையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஏலம் எடுத்த நபர், ஏலத்தொகையுடன் இதர வரிகள் சேர்த்து 31-ம் தேதி காலை 11 மணிக்குள் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT