20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரேயொரு எம்எல்ஏ என்ற புள்ளிவிவரப்படி தேர்தலில் களமிறங்கி ஆறு எம்எல்ஏக்களை வென்று முதல்முறையாக புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக இடம் பிடித்துள்ளது. அடுத்ததாக எல்லையிலுள்ள 4 மாநில எம்பி தொகுதிகளில் கவனம் செலுத்தவுள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 14 தேர்தல்கள் நடந்துள்ளன. கடந்த 1964, 1985, 1991, 2001, 2006, 2016 ஆறு முறை காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளது. திமுக கடந்த 1969, 1980, 1990, 1996 ஆகிய நான்கு முறை ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக 1974, 1977ல் ஆட்சியமைத்தது. கடந்த 2011ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இம்முறை என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2001ல் ரெட்டியார்பாளையம் தொகுதியில் பாஜகவில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே தேர்தலில் வென்றவர். ஆனால் 2001க்கு பிறகு பாஜக எத்தேர்தலிலும் ஒரு தொகுதிகூட புதுச்சேரியில் வெல்லவில்லை. மத்தியில் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்தது.
ஆனால் இரு கட்சிகளும் பாஜகவை விலக்கின. அத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன.
இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்கூட்டியே களமிறங்கியது. காங்கிரஸில் இருந்து முக்கிய அமைச்சர், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி இணைந்தனர். முன்கூட்டியே கர்நாடகத்திலிருந்து 30 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். முதலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டு தமிழிசை நியமிக்கப்பட்டார். அடுத்ததாக மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தால்தான் பலன் கிடைக்கும் என்றும் உறுதியாக தெரிவித்தனர். மேலிடப்பொறுப்பாளர்கள், மத்திய அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் என பலரும் புதுச்சேரியில் முகாமிட்டனர். என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில்வென்றனர். அதையடுத்து நியமன எம்எல்ஏக்களாக 3 பேரையும் பாஜக நியமித்துள்ளது.
கடந்த தேர்தலில் 2.4 சதவீதம் வாக்குகள் பெற்ற பாஜக இம்முறை 13.66 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமாக 1.14 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் பாஜக இடம் பெற்றுள்ளது. குறிப்பாக என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கேற்று இருவர் அமைச்சராகியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவரே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆறு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் ஆகியோருடன் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.
பாஜக வட்டாரங்கள் கூறுகையில், "புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் வடமாவட்டங்கள், காரைக்காலையொட்டி காவிரி டெல்டா பகுதிகள், மாஹே ஒட்டி கேரளப்பகுதி, ஏனாமையொட்டிய ஆந்திரப்பகுதி என நான்கு மாநிலங்களில் பத்து எம்பி தொகுதிகளிலும் வரும் மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்த முடியும். வரும் தேர்தல்களில் புதுச்சேரியில் பாஜக ஆட்சியை உருவாக்கும் வகையில் பணிகள் நடக்கும்" என்று திட்டங்களை வெளிப்படுத்துகின்றனர்.