சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தின் பாரம்பரிய சிலைகளை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ளபேரக்ஸ் சாலையில், அறநிலையத் துறை சார்பில் கோயில் பணியாளர்களுக்கான கரோனா பரிசோதனை முகாமை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை, அறநிலையத் துறை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு அளித்து, அதில் வரும் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறைப்படி, தற்போது தமிழகத்தில் 207 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதிய பின்னர், சைவம் மற்றும் வைணவ வழிபாட்டுத் தலங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, தமிழகத்தின் பாரம்பரிய சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. அவற்றை சட்டரீதியாக தமிழகத்துக்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.
வரும் திங்கள்கிழமை முதல்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அனைத்து கோயில்அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு தினமும் 500 பேர் வீதம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.