கராலில் சிகிச்சை பெற்று வரும் ரிவால்டோ யானையின் மறுவாழ்வு குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயதுடைய ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித்திரிந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் பார்வை குறைபாடு காரணமாக வனப்பகுதிக்குள் செல்லாமல், குடியிருப்புப் பகுதிகளிலேயே நடமாடிய ரிவால்டோ யானை, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
கடந்த மே மாதம் 5-ம் தேதி இந்த யானையை பிடித்த வனத்துறையினர், அதை கரால் என்னும் மரக்கூண்டில் அடைத்து, 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், ரிவால்டோ யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்யவும், வனப் பகுதியில் விடுவிப்பதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அழைத்துச்சென்று பராமரிப்பதா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக வன கால்நடைத் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் மனோகரன் தலைமையில் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறியதாவது:
ரிவால்டோ யானையின் மறு வாழ்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்லைக்கழகம் சார்பில் ஒரு கால்நடை மருத்துவர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் எஸ்பிசிஏ சார்பில் தலா ஒரு உறுப்பினர், உலகளாவிய வனவிலங்குகள் நிதியம் பூமிநாதன், ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாசன், உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல் துறைஉதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன்உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிசிஏ மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்கக்கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் நியமனம்செய்யப்பட்டதும், வாழைத்தோட்டம் கராலில் உள்ள ரிவால்டோவைஆய்வு செய்வர். அப்போது,யானையின் உடல்நலன், கண்மற்றும் தும்பிக்கையின் செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் களை கடைபிடித்து, ரிவால்டோவை வனத்தில் விடுவிப்பது குறித்து ஆராய்ந்து, இக்குழுவினர் பரிந்துரை அளிப்பர். அதன்பின்பே ரிவால்டோவை, முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்வதா அல்லது வனத்தில் விடுவிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.