திருவள்ளூர், மணவாளர் நகரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குளம். 
தமிழகம்

ஒண்டிக்குப்பத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள குளத்தைச் சுற்றி சுவர் எழுப்ப மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஒண்டிக்குப்பத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள குளத்தைச் சுற்றி சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர், மணவாளர் நகரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் சாய்பாபா மற்றும் சிவன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள்வந்து சுவாமி தரிசனம் செய்வதுவழக்கம். குறிப்பாக, குழந்தைகளும் அதிக அளவில் இக்கோயில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், இக்கோயில்களுக்கு அருகில் குளம் ஒன்று உள்ளது. சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்தக் குளத்தில் முழு அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.

கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுடன் வரும் குழந்தைகள் இக்குளத்தருகே விளையாடுவது வழக்கம். அத்துடன், குளத்தைச் சுற்றி ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளும் மேய்கின்றன. இந்தக் குளத்தைச் சுற்றி முறையாக கரை அமைக்கப்படவில்லை.

இதனால், குளத்தில் யாராவது தவறி விழ வாய்ப்புள்ளது. அவ்வாறு விழுந்தால் அவர்களது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தைவிளைவிக்கும். எனவே, முன்னெச்சரிக்கையாக, குளத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT