தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர். 
தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 அங்கன்வாடி மையங்களுக்கு சிறப்பு தகுதிச் சான்று: தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் வழங்கியது

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 அங்கன்வாடி மையங்கள் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செயல்பட்டதால் தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மூலம் இந்த அங்கன்வாடி மையங்களுக்கு ஈட் ரைட் கேம்பஸ் தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள், உணவுவணிகர்கள், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு தரமான மற்றும்சத்தான உணவுகளை வழங்குவதுடன், அந்த மையங்களை மிகவும்சுத்தம், சுகாதாரமாக பராமரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 25 அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தது. அதில் 13 அங்கன்வாடி மையங்களுக்கு ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற தகுதிச் சான்றை வழங்கியது.

இவற்றில் கீழ்படப்பை அங்கன்வாடி மையத்துக்கு 5 ஸ்டார் அந்தஸ்தும், மற்ற அங்கன்வாடி மையங்களுக்கு 4 ஸ்டார் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் தமிழ்நாட்டு அளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும்தான் 13 அங்கன்வாடி மையங்களுக்கு ஈட் ரைட் கேம்பஸ் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அங்கன்வாடி மையங்களுக்கு அந்தச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்திவழங்கி பாராட்டு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் விடாமல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கான தடுப்பூசி முகாம்களை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செய்து தர வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) வி.கே.பழனி, உணவு பாதுகாப்புத் துறை நியமனஅலுவலர் அனுராதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சற்குணம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT