சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 60 சதவீதம் முடியவேண்டிய கீழடி அகழ் வைப்பகப் பணி 17 சதவீதமே நடந்துள்ளதால் பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரரை அமைச்சர் எ.வ.வேலு கண்டித்தார்.
திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட பொருட்களைப் பொதுமக்கள் காணும் வகையில் கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் அகழ் வைப்பகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் பணியில் தொய்வு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிக வரித்துறை அமைச்சர் ப.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அகழ் வைப்பகம் பணியை இன்று ஆய்வு செய்தனர்.
அப்போது அடித்தளப் பணி கூட முழுமை அடையாததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் எ.வ.வேலு, ‘ஒப்பந்தப்படி தற்போது 60 சதவீதப் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 17 சதவீதமே முடிந்துள்ளது. இப்படிப் பணி செய்தால் எப்போது முடிப்பது’ என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரரைக் கண்டித்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேசுகையில், ''கரோனா சமயம் என்பதால் ஒப்பந்ததாரர் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறினர். மேலும் பணி தாமதம் குறித்து நோட்டீஸ் கொடுத்துள்ளோம்'' என்று தெரிவித்தனர்.
பிறகு அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அகழ் வைப்பகம் பணியின் தொய்வு குறித்து புகார் வந்ததையடுத்து, முதல்வர் உத்தரவுப்படி பார்வையிட வந்தோம். தற்போது 60 சதவீதப் பணிக்கு 17 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முடிந்தால் ஒப்பந்தப்படி அக்டோபருக்குள் கட்டி முடிக்கப்படும்.
மேலும், கீழடிக்குச் சாலை வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். அகழ் வைப்பகத்தின் வடிவமைப்பை மாற்றமாட்டோம். அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மாற்றும் குறுகிய மனப்பான்மை எங்களிடம் கிடையாது'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர்கள் கீழடியில் நடக்கும் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகளையும், கண்டறிப்பட்ட தொல்பொருட்களையும் பார்வையிட்டனர். பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, முதன்மைப் பொறியாளர்கள் விஸ்வநாதன், ரகுநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.