அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தமிழ் இலக்கியத்திலும், தமிழ் இதழியலிலும் போற்றுதலுக்குரிய முன்னோடிகளில் ஒருவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. ’பொன்னியின் செல்வன்’, ‘சிவாகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, ’தியாக பூமி’ உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத இலக்கியப் பெரும்படைப்புகளைப் படைத்த அவர், கல்கி வார இதழைத் தொடங்கியவரும்கூட. இந்திய விடுதலைப் போராட்டத்திலும் எழுத்துகள் வழியாகவும் செயல்பாடுகள் வழியாகவும் பங்கேற்றவர் என்கிற வகையில் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்.
அவருடைய நினைவாகத் தொடங்கப்பட்ட கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில் (2021- 22) ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களும், பாலிடெக்னிக் மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வில் 80 சதவீதத்துக்குக் குறைவில்லாத மதிப்பெண் சராசரியைப் பெற்றிருக்க வேண்டும். ரூ.60 ஆயிரத்துக்குக் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் www.kalkionline.com எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, மாணவர்கள் தம் கைப்பட எழுதி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, ’கீதம்’ முதல் மாடி, நெ.14, நாலாவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர், அடையாறு, சென்னை-600 020 என்னும் முகவரியில் உள்ள ’கல்கி கிருஷ்ண மூர்த்தி நினைவு அறக்கட்டளை’க்கு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
இந்தக் கல்வி உதவித்தொகை திட்டத்தைக் கல்வி ஆர்வம் மிக்க, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.