அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம் 
தமிழகம்

சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கும் பணி தீவிரம்: மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 26) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"இந்தியாவில் 14 இடங்களில் வைரஸ் பகுப்பாய்வு மையங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் பெங்களூருவில் பரிசோதிக்கப்பட்டன. அவர்களின் குடும்பத்தார், அருகில் வசிப்பவர்கள், உறவினர்களை பரிசோதித்து வருகிறோம்.

இந்த 9 பேரும் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர். அதில், ஒருவர் திருமணமே செய்துள்ளார். மற்றவர்களும் அவரவர்களின் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவருக்கு மட்டும்தான், இறந்த பின்பு மாதிரி எடுக்கப்பட்டது.

கரோனா உச்சத்திலிருந்த போது ஏற்பட்ட தொற்றுதான் இது. இதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும், டெல்டா பிளஸ் வைரஸ்தான் 3-வது அலையாக உருவெடுக்குமோ என மருத்துவ நிபுணர்களின் ஆய்வு தொடர்ந்து வெளிப்படுகிறது.

எனவே, தமிழகத்திலேயே வைரஸ் பகுப்பாய்வு மையத்தை அமைக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐசிஎம்ஆர் நடத்தும் ஆய்வுக்கூடங்கள்தான் உள்ளன. மாநில அரசின் சார்பில் இதுவரை வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கப்படவில்லை.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி சென்னையில் இந்த மையத்தை அமைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பியிருக்கிறோம்.

அதன் உபகரணங்கள் வாங்குவதற்கு இரண்டரை கோடி ரூபாய் செலவாகும். அதற்கும் இன்று உத்தரவிட்டுள்ளோம். 20-25 நாட்களில் இந்த மையம் அமைக்கப்படும். இனி பரிசோதனை மாதிரிகளை வெளிமாநிலத்திற்கு அனுப்ப தேவையிருக்காது".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், தலைமைச்செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், "முதல் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றாளரை கண்டறிந்ததிலிருந்தே கண்காணிப்புகள் தொடங்கிவிட்டன. செவிலியர் பாதிக்கப்பட்ட உடனேயே அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்தோம். அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. இந்த வைரஸ் பெரிதளவில் பரவவில்லை.

ஆனாலும், கூட தீவிர கண்காணிப்பில் இத்துறை ஈடுபட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள 9 பேரின் குடும்பத்தினரும் கண்காணிக்கப்பட்டுள்ளனர். எந்த வகையிலும் பயமில்லை. கரோனாவுக்கான அறிகுறியே அந்த வட்டாரத்தில் இல்லாதபோது கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT