இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் விசைப் படகில் ஏற்பட்ட துளைகள். (உள்படம்) விசைப் படகில் கிடந்த துப்பாக்கிக் குண்டு. 
தமிழகம்

இலங்கை கடற்படை நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு: பாம்பன் மீனவர்கள் 23 பேர் உயிர் தப்பினர்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினர் நடத்தியதுப்பாக்கிச்சூட்டில் பாம்பன் மீனவர்கள் 23 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 17 முதல் கடலுக்குச் செல்கின்றனர். நேற்று முன்தினம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாம்பன் தெற்குப் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தலைமன்னார் அருகே மீனவர்கள் மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டினால் கைது செய்வோம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

உடனே அந்தப் பகுதியில் மீன்பிடித்த பாம்பன் மீனவர்கள் இலங்கை கடற்படையைக் கண்டதும் படகுகளை கரையை நோக்கி திருப்பினர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் லிம்பர்ட்,காலின்ஸ், கிருபை ஆகியோருக்குச் சொந்தமான 3 படகுகளில் துப்பாக்கிக் குண்டுகள் பட்டுச் சிதறின. இந்த 3 படகுகளில் இருந்த 23 மீனவர்களும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் மீன்வளத் துறை மற்றும் மெரைன்போலீஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு படகில் இருந்து துப்பாக்கிக் குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

SCROLL FOR NEXT