ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையில் கரோனா நோயாளிக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
தமிழகம்

கரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை: ஆக்சிஜன் தேவை குறைந்து குணமடைவதாக தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையால் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் இருந்த குறைபாடும், ஆக்சிஜன் தேவையும் குறைந்துகுணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் சுரேஷ்குமார், வேலவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா 2-வது அலை, நமது சிகிச்சை முறையில் ஒரு முக்கியமான குறைபாட்டை அடையாளம் காட்டியுள்ளது. கரோனா பாதிப்பில் இறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கட்டுப்பாடற்ற அழற்சி ஆகும்.இது Cytokine storm என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளநோயாளிக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிப்பது, உதவி சுவாசம் மற்றும் அழற்சியை குறைப்பதற்கான ஏதோ ஒரு மருத்துவ உதவி என்பதே தீர்வாகும்.

இந்த முறையைச் செயல்படுத்துவதற்குத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் பிறஉயர் மருத்துவ கருவிகளின் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், முழு நுரையீரலுக்கும் குறைந்த அளவிலான கதிர்வீச்சு என்பது மிகவும் பயனுள்ள தீர்வாக உள்ளது. சமீபத்தில் மேற்கத்திய நாடுகள் இம்முறையில் கரோனா நோயாளிகளை தொற்றில் இருந்து மீட்டு வெற்றி கண்டுள்ளன.

கரோனா நோயாளிகளுக்கு ஒரே நாளில் 1 GY கதிர்வீச்சு அளவைக் கொண்டு, இரண்டு நுரையீரலுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் பெரும்பாலான கரோனா நோயாளிகளின் உடல் நிலையில் கணிசமாக முன்னேற்றம் காணப்பட்டது.

இச்சிகிச்சை முறையில் நுரையீரல், இதயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த சிகிச்சைக்குப் பின்னர் நீண்டகால பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்கெனவே இந்த சிகிச்சையை முயற்சித்து சாதகமான முடிவுகளைக் கண்டறிந்துள்ளது.

இந்த சோதனையை மேற்கொள்ள ஈரோடு கேன்சர் சென்டர்ஏற்கெனவே நெறிமுறை வாரியத்தின் ஒப்புதலையும், இந்திய மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் இருந்தும் ஒப்புதல் பெற்றுள்ளது. ஈரோடு கேன்சர் சென்டரில் பலநோயாளிகளுக்கு இந்த சிகிச்சையை அளித்ததன் மூலம், நல்ல முன்னேற்றமும், சுவாசிப்பதில் இருந்த குறைபாடுகளும், ஆக்சிஜன் தேவையும் குறைந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT