தமிழகம்

திமுகவில் இணைந்த செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள்: ஈரோடு மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி

எஸ்.கோவிந்தராஜ்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த ஈரோடு மாவட்ட முக்கியநிர்வாகிகள், திமுகவில் இணைந்துள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஈரோடு எம்ஜிஆர் மன்றஇணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஆர்.கந்தசாமி, எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் எஸ்.பி.ரமேஷ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.சி.வரதராஜ், கோபி நகரச்செயலாளர் பி.கே.காளியப்பன் ஆகியோர் நேற்று காலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் திமுகவில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபிதொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள்.

குறிப்பாக, அதிமுக வர்த்தகர் அணிச் செயலாளராக இருந்தசிந்து ரவிச்சந்திரன், செங்கோட்டையனின் நிழல்போல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்தபோது, துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளிலும், சிந்து ரவிச்சந்திரன் கை ஓங்கி இருந்தது.

மேலும், தலைமைக் கழக நிர்வாகி என்பதால், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் சிந்து ரவிச்சந்திரனுடன் நெருக்கமாக இருந்தனர். இந்நிலையில் அவரது நீக்கம் மற்றும் திமுகவில் இணைந்தது அதிமுக முன்னணி நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டஅதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஒரு அணியும், பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. முன்னாள் அமைச்சர் கருப்பணனுடனான மோதலால், பெருந்துறைஎம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் கட்சியில் இருந்து வெளியேறி சுயேச்சையாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதேபோல், கருப்பணனுடனான மோதல் காரணமாக, அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் சரவணபவா சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் இணைந்துள்ளனர். இதில் கந்தசாமியின் மனைவி நவமணி தற்போது ஈரோடு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்து வருகிறார். திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றாலும், அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஏற்பாட்டில் இந்தஇணைப்பு நடவடிக்கை நடந்துள்ளது. இந்த நடவடிக்கை அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

இதுதொடர்பாக செங்கோட்டையனின் கருத்தை அறிய தொடர்பு கொண்டபோது பேசிய அவரது உதவியாளர் சபேசன், ‘இது கட்சிவிவகாரம். நான் பிறகு கூப்பிடுகிறேன். செங்கோட்டையன் வெளியூரில் உள்ளார்’ என்று பதிலளித்தார்.

SCROLL FOR NEXT