தமிழகம்

கல்லம்பாளையம் நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக புகார்

செய்திப்பிரிவு

கல்லம்பாளையம் நியாயவிலைக் கடையில் விநியோகிக்கப்படும் விலையில்லா அரிசி, தரமற்ற வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சி ராக்கியாபாளைம்-2 நியாயவிலைக் கடையில் கடந்த மாதம் விநியோகம் செய்யப்பட்ட அரிசி தரமற்றதாகவும், கருப்பு நிறத்திலும், துர்நாற்றம் வீசியதாகவும் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது திருப்பூர் மாநகர் 46-வது வார்டுக்கு உட்பட்ட ராயபுரம் கல்லம்பாளையத்திலுள்ள நியாயவிலைக் கடையில் நேற்று விநியோகிக்கப்பட்ட அரிசி தரமற்ற வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, "ஊரடங்கு நேரத்தில் போதிய வருவாய் இன்றி வாழ்கிறோம். பெரும்பாலான குடும்பங்கள், பொது விநியோகத்தை நம்பித்தான் உள்ளன. தற்போது எந்தவிதவருவாயும் இல்லாத பல குடும்பங்களில், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசிதான் மூன்று வேளைக்குமான உணவாக உள்ளது. இதுபோன்ற நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தை உறுதி செய்யவேண்டியதில், மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் பொறுப்புண்டு.

இலவசமாக அளிக்கிறார்கள் என்பதற்காக, தரமற்ற வகையில் விநியோகிப்பது எந்த வகையில் நியாயம்? சமைத்து சாப்பிட உதவாத அரிசி விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

பொதுமக்களின் கோரிக்கையை யடுத்து, அரிசி விநியோகம் நிறுத்தப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர்வி.கணேசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு வட்ட அலுவலரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT