ராணிப்பேட்டை மாவட்டம், தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மாலதி(26). இவர் பிரசவத்துக்காக கடந்த 21-ம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு புதன்கிழமை (ஜூன் 23) காலை 7.30 மணிக்கு 2.6 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை ஆரோக்கியத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி, சொட்டு மருந்து, அம்மை தடுப்பூசி ஆகியவற்றை போட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலதி குழந்தைக்கு பால் கொடுக்க தூக்கியபோது அசைவற்ற நிலையில் இருந்தது. சந்தேகம் அடைந்த மாலதி குழந்தையை மருத்துவரிடம் காண்பித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை இறந்ததை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ``இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து தடுப்பூசி போட்டதே குழந்தை இறப்புக்கு காரணம்'' என்று கூறி அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். விஷ்ணு காஞ்சி போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ``குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அஜாக்கிரதையாக கொடுத்தால் நுரையீரலுக்குள் சென்றுவிடும். அதனால் கூட குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென இறப்பது உண்டு'' என்றனர்.