திருநெல்வேலி மாநகர சாலைகளில் கால்நடைகள் அதிகம் உலா வருகின்றன. வாகன ஓட்டிகளை தொடர்ந்து அச்சுறுத்தும் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலியில் தளர்வு களுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், சாலை களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது.
இந்த போக்குவரத்து நெரிசலு க்கு மத்தியில் திருநெல் வேலி தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிச்சாலை, ஊசிகோபுரம் பகுதி, குலவணிகர்புரம், டவுன், திருச்செந்தூர் சாலை, மார்க்கெட் பகுதி, குறிச்சி முக்கு, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, கொக்கிரகுளம் சாலை, பெருமாள்புரம் பகுதி களில் மாடுகளும் பெருமளவில் சாலைகளில் உலா வருகின்றன. இரவு நேரங்களில் ஆங்காங்கே சாலையோரங்களில் அவை படுத்துக்கொள்வதால், வாகனங் கள் மோதி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.
பசு மரணம்
திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் நேற்று முன் தினம் இரவில் கருத்தரித்திருந்த பசுமாடு ஒன்று லாரி மோதி பலத்த காயங்களுடன் சாலையின் நடுவே கிடந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த பலர் முயற்சித்தும் முடியவில்லை. பாளையங்கோட்டை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பசுமாட்டை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். பலத்த காயமுற்று அவதியுற்ற அந்த பசுமாட்டுக்கு சிகிச்சை அளிக்க விலங்கு ஆர்வலர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். நீண்ட நேரத்துக்குப்பின் மருத்துவர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் நள்ளிரவில் அந்த பசுமாடு இறந்துவிட்டது. அந்த மாடு அவதியுற்றபோது அதன் உரிமையாளர் யாரும் அங்குவரவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தற்போது திருநெல் வேலி மாநகரில் அதிகம் நடைபெறு கின்றன. மாடுகளை சாலைகளில் திரிய விடும் உரிமையாளர்களை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் அவ்வப்போது எச்சரித்தும், அவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
சிபாரிசால் அழுத்தம்
இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர் அல்பி ரஹ்மான் கூறும்போது, "சாலைகளில் திரியும் பசுமாடுகளின் உரிமை யாளர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறது. மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தால் அரசியல்வாதிகள் சிலரின் அழுத்தம் காரணமாக, அபராதமின்றி அவற்றின் உரிமையாளர்கள் கூட்டிச் சென்றுவிடுகின்றனர்.
மாடுகளை வளர்ப்போர் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்வதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் நேரிட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் இதை கண்காணித்து சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கவும், அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்க அந்தந்த மண்டலங்களில் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். சிபாரிசுக்கு யார் வந்தாலும் ஏற்க கூடாது” என்று தெரிவித்தார்.