தமிழகம்

மதுரைக்கும் வந்துவிட்டதா ‘டெல்டா ப்ளஸ்’ வைரஸ்? தொடர்பில் இருந்தவர்களை விசாரிக்கும் சுகாதாரத்துறை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

உலக நாடுகளில் பரவியதாகக் கூறப்பட்ட டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு, மதுரையிலும் ஒருவருக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உருமாற்றம் அடைந்த கரோனா டெல்டா ப்ளஸ் வைரஸ், உலகில் சீனா, நேபாளம், அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ரஷ்யா, போலந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கேரளத்தைத் தொடர்ந்து, தமிழத்திலும் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. மேலும் 3 பேருக்கு இந்தத் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று உறுதி செய்தார்.

இதில், ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், மற்ற நோயாளிகள் சென்னை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. டெல்டா ப்ளஸ் கண்டறியப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்களைக் கண்காணித்து தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 3 மாதமாக தமிழகத்தில் இரண்டாவது கரோனா அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் டெல்டா ப்ளஸ் என்ற புதிய வகை வைரஸ் பாதிப்பின் பரவல் மூன்றவாது அலைக்கு அடித்தளமாக அமைந்துவிடுமோ என்று மருத்துவ வல்லுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.

புது வகை வைரஸ் தாக்கம், மக்களுடைய இயல்பு வாழ்க்கையை மீண்டும் முடக்கிப்போட்டு விடுமோ என அச்சப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து டீன் ரத்தினவேலுவிடம் கேட்டபோது, ‘‘எங்களைப் பொறுத்தவரையில் இதுவரை அரசு மருத்துவமனையில் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்றுக்கு யாரும் இறக்கவில்லை. யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. சுகாதாரத்துறை மதுரையில் உள்ள மாதிரிகளை புனேவுக்கு அனுப்பி பரிசோதனை செய்திருக்கலாம். அதுபற்றிய விவரம் இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை. விசாரிக்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT