காவல் நிலையங்களுக்கு புகார் மனுக்களுடன் வரும் பொதுமக்களிடம் கடமை உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என போலீஸாருக்கு திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி அறிவுரை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பல்வேறு காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, வாணியம்பாடி காவல் உட்கோட்டப் பகுதிகளுக்கு உட்பட்ட நகரக் காவல் நிலையம், கிராமியக் காவல் நிலையம், அம்பலூர், திம்மாம்பேட்டை, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், ஆலங்காயம், காவலூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, காவலர் வருகைப் பதிவேடு, ஆவணங்கள் பராமரிப்பு, காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணி, ஆயுதங்கள் பாதுகாப்பு அறை, ரோந்துப் பணி பதிவேடு, முதல் தகவல் அறிக்கைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதன்பிறகு, பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது காவல் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, இதுவரை முடிக்கப்பட்டுள்ள வழக்கு விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் யாவை, அதன் மீது காவல் துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து அந்தந்தக் காவல் நிலைய ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்.
பிறகு எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி கூறியதாவது:
''காவல் நிலையங்களுக்கு புகார் மனுக்களுடன் வரும் பொதுமக்களிடம், பணியில் உள்ள காவலர்கள் கடமை உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு புகாராக இருந்தாலும் அதன் மீது தீர்வு காண வேண்டும். காவல் நிலையங்களில் பஞ்சாயத்து பேசி பொதுமக்களை அனுப்பக் கூடாது. வேண்டியவர், வேண்டாதவர் எனப் பாகுபாடு பார்க்கக் கூடாது.
புகார்தாரர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். குறிப்பாகப் பெண்கள், முதியவர்களை அலைக்கழிக்கக் கூடாது. ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்- ஒழுங்கு சீராக இருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நிகழாமல் இருக்க ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபட வேண்டும். குறிப்பாக இரவு ரோந்துப் பணி அவசியம் என்பதால் சுழற்சி முறையில் ரோந்துப் பணிக்கு அனைவரும் செல்ல வேண்டும்.
கள்ளச் சாராயம், மணல் திருட்டு, கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டிக் கொடுமை, பாலியல் விவகாரம், வாகனத் திருட்டு, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.
தலைமறைவுக் குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகளிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும்.''
இவ்வாறு எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி அறிவுரை வழங்கினார்.
அப்போது, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்செல்வம், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் உடனிருந்தனர்.