9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தொடங்கியது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
“திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25-06-2021 (இன்று) மாலை 5 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திட்டமிட்டபடி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை அடுத்து 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஊரக அளவில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.
புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேற்கண்ட சூழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் மாவட்டத்தில் உள்ள கட்சியின் நிலை, வெற்றி வாய்ப்பு, கரோனா தொற்று, தேர்தல் நடத்தும் சூழல், உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.