தமிழகம்

மதுரை மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் மீதான வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தடுக்க முற்படும் அதன் நிர்வாக இயக்குநர் ஜீவா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை, மூன்று வாரங்களில் பரிசீலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் அதிமுகவைச் சேர்ந்த பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “கூட்டுறவு சங்கங்கள் சட்டப்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயக்குநர்கள் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்ற விதி உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதியின் காரணமாக கூட்டம் தள்ளிப்போனது. தேர்தலுக்குப் பின் தற்போது இயக்குநர்கள் கூட்டம் நடத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநருமான ஜீவாவை அணுகினேன்.

ஆனால், எனது கோரிக்கையைப் பரீசிலிக்காமால் தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக நிர்வாக இயக்குநர் என்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார். முறைகேடான வகையில் சட்டத்திற்குப் புறம்பாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தடுக்க முற்படுகிறார்.

தனக்கான பணியைச் செய்யத் தவறிய மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநரான ஜீவா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் கடந்த மே மாதம் 25ஆம் தேதி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு நடைபெற்று வந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை மூன்று வாரங்களில் பரீசிலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT