தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன் 25) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் எவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடியும் என்பதை முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் நேரில் தெரிவித்துள்ளார். பாஸ்டியர் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஒரு மாதத்திற்கு ஒரு கோடி வரை தடுப்பூசிகள் தயாரித்துத் தர முடியும் என, அந்நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். அந்நிறுவனத்தில் 303 பேர் பணியாற்றுகின்றனர். நிர்வாகத்தின் சார்பிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கேட்டுள்ளனர். இரண்டையும் முதல்வர், பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. நேற்றுதான் அதிகபட்சமாக 4 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இதற்கு முன்பு, கடந்த வாரம் 3 லட்சத்து 68 ஆயிரம் என்பது அதிகபட்சமாக இருந்தது.
இதுவரை, 1 கோடியே 41 லட்சத்து 27,980 பேருக்குத் தடுப்பூசி வந்தது. இதில், 1 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 228 பேர் செலுத்தியுள்ளனர்.
இன்று காலை வரை 6 லட்சத்து 74,260 தடுப்பூசி இருப்பு இருந்தது. இன்று மாலை 3 லட்சம் தடுப்பூசிகள் வரவிருப்பதாகத் தகவல் வந்துள்ளது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மித்ரா என்ற சிறுமி, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு சிகிச்சைக்கு ரூ.16 கோடி செலவாகும் என்பதால் உதவி கோரி, சமூக வலைதளங்களில் தகவல்கள் வருவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இச்செய்தியின் உண்மை நிலையைக் கண்டறியச் சொல்லியிருக்கிறோம். சமூக வலைதளங்களில் சில செய்திகள் உண்மையாகவும் உள்ளன. சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டதாகவும் உள்ளன. உண்மை நிலை தெரிந்தவுடன் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்று நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.