தமிழகத்தில் கரும்பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க மொத்தமாக 7,000 படுக்கைகள் உள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன் 25) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரும்பூஞ்சைக்கு மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலையிலான 12 மருத்துவர்கள் அடங்கிய வல்லுநர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. இதுவரை, தமிழகத்தில் 2,822 பேருக்கு கரும்பூஞ்சை வந்துள்ளது.
கரும்பூஞ்சை அறிகுறிகள் உள்ளவர்கள் விரைந்து மருத்துவமனைக்கு வந்தால் அவர்களை முழுமையாக குணப்படுத்தலாம். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மொத்தமாக 7,000 படுக்கைகள் கொண்ட கரும்பூஞ்சை சிகிச்சை மையம் உள்ளது. சென்னை, மதுரையில் தலா 500, மற்ற மாவட்டங்களில் 200-300 என்ற அளவில் படுக்கைகள் உள்ளன.
கரும்பூஞ்சை தொடர்பான இடைக்கால அறிக்கையினை வல்லுநர் குழு இன்று தாக்கல் செய்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கரும்பூஞ்சையால் உயிரிழக்கும் சதவீதம் குறைந்துள்ளது. ஏனென்றால், அதற்கான நடவடிக்கைகளை முன்பே எடுத்தோம்.
கரோனா தொற்றிலிருந்துதான் கரும்பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. அவர்கள்தான் இதில் பாதிக்கப்படுகின்றனர். மே 2-ம், 3-ம் வாரங்களில், கரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதிலிருந்து 2-3 வாரங்கள் கழித்துதான் கரும்பூஞ்சை நோய் அறிகுறிகள் தெரியவரும். கரோனா தொற்று குறைவதால், கரும்பூஞ்சை படிப்படியாகக் குறையும்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.