அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஜூன் 25) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"தமிழகத்தில் முதன்முறையாக வைரஸ் பகுப்பாய்வு மையம் தொடங்கவிருக்கிறோம். பெங்களூருவுக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதமாவதால், மத்திய அரசு மட்டும் செய்துகொண்டிருக்கும் வைரஸ் பகுப்பாய்வு ஆய்வை, ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி செய்துகொண்டிருக்கும் 14 நிறுவனங்களைத் தாண்டி, மாநில அரசு இதை செய்யவிருக்கிறோம்.

எதிர்காலத்தில் இந்த வைரஸால் பாதிப்பு அதிகமாகக்கூடாது என்பதற்காக, அதனை கட்டுக்குள் வைத்திருக்க சென்னையில் புதிய பகுப்பாய்வு மையத்தை நிறுவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

தமிழகத்தில் 3 பேருக்கு புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது உள்ள தடுப்பூசியே டெல்டா பிளஸ் வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும். ஏனெனில், இந்த டெல்டா பிளஸ் வைரஸ் இரண்டாவது அலையிலேயே ஏராளமானோருக்கு வந்துபோயிருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது. இதன் பாதிப்பு பெரிதாக இல்லை. இந்த தொற்று வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு இந்த தொற்று பரவவில்லை.

கரோனா தொற்று உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதோ, அதே சிகிச்சைதான் இவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் நலமுற்றிருக்கின்றனர்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT