தமிழகத்தில் நீட் தேர்வில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி, நீட் தேர்வின் பாதிப்புகுறித்து குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்விஇயக்குநரகத்தில் கடந்த 14-ம் தேதிநடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று குழு கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்ட அவகாசம் நேற்று முன்தினம் (ஜூன் 23) முடிந்தது. அதன்படி,பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து 85 ஆயிரத்து 935 கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.
இந்த தகவல்களை ஆராய்ந்து அறிக்கையைத் தயாரிக்க ஆணையம் ஆலோசித்து வருகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளில் பெரும்பாலும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்தையே வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படு கிறது.
பொதுமக்களின் கருத்துகளை முழுமையாக ஆராய்ந்து அடுத்தகட்ட முடிவு எடுப்பது தொடர்பாக வரும் 28-ம் தேதி, குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.