அமீர் அர்ஷ் 
தமிழகம்

எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து கொள்ளை: தமிழகத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டிய 10 பேர் கும்பல்; கைது செய்யப்பட்ட ஹரியாணா கொள்ளையன் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பல இடங்களில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்.களில்நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் வடமாநிலங்களில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறி வைத்து கும்பல் ஒன்று நூதனமுறையில் பணம் கொள்ளையடித்தது. அதாவது, எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் வசதி கொண்ட இயந்திரங்களை குறிவைத்து ஒரே பாணியில் கடந்த 15-ம் தேதியிலிருந்து 18-ம் தேதிக்குள் அடுத்தடுத்து பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தது.

சென்னையில் நடந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதேபோன்ற கொள்ளை சம்பவம் ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்திருப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது. மேலும்கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் தென் சென்னை காவல்கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில், தி.நகர் துணை ஆணையர்மேற்பார்வையிலான தனிப்படை போலீஸார் விமானம் மூலம் ஹரியாணா சென்று அங்கு பதுங்கிஇருந்த பல்லப்கர்க் பகுதியைச்சேர்ந்த அமீர் அர்ஷ் (37) என்பவரைநேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். இவர்கள் வடமாநிலத்திலும் இதேபாணியில் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். அமீரிடம்நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடித்தது எப்படிஎன்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 5குழுக்களை சேர்ந்த 10 பேர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தலா 2 பேர் வீதம் தனித்தனியாக பிரிந்து தமிழகம் வந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

அமீரும் அவரது கூட்டாளியும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்னையில் சுற்றி வந்து எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் வசதி உள்ள இயந்திரங்கள் இருக்கும் ஏடிஎம் மையங்களைத் தேர்வு செய்ததாகவும், பணம் செலுத்தும் இயந்திரத்தின் பணம் வரும் இடத்தில் உள்ள ஷட்டரை 20 விநாடிகள் பிடித்தும் சென்சாரை மறைத்தும் 100-க்கும் மேற்பட்ட தடவைபணம் எடுத்ததாகத் தெரிவித்துள் ளார்.

கொள்ளையர்கள் அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அமீர் சென்னையிலிருந்து விமானம்மூலம் தப்பி ஹரியாணா சென்றுள்ளார். அமீர் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட அவரதுகூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். எனவே, அனைவரையும் கைது செய்வதற்காக அம்மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் தனிப்படை போலீஸார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அமீரை தனிப்படை போலீஸார் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவரை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT