தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியிருப்பதாவது:
வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களுக்கும் லாபகரமான விலையை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்துவது, கொள்முதல் செய்வது போன்றவற்றை தமிழக அரசு மேற்கொள்ளாததால், விவசாயிகள் அவற்றை சாகுபடி செய்யாமல் நெல் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் நெல் விளைச்சல் அதிகமாகி உள்ளது.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டுசாகுபடி செய்து, கொள்முதல்செய்யப்பட்ட சம்பா நெல் மூட்டைகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல், தமிழக அரசின் திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக நெல்மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், இடப்பற்றாக்குறையால் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தவிக்கின்றனர்.
வாடகை இன்றி பயன்படுத்த..
மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளுக்கு வாடகை அதிகம் என்பதால், தமிழக அரசு அவற்றைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, மத்திய அரசு தனது சேமிப்புக் கிடங்குகளில் வாடகை இல்லாமல் நெல்லை சேமித்து வைக்க கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக, பிரதமருடன் முதல்வர் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை, கடந்த ஆண்டுகளைப் போல ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.