கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில், நில அளவைக் கருவிகளை ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டார். 
தமிழகம்

ஈரோட்டில் இ-சேவை மையங்கள் இயங்காததால் ஜமாபந்தியில் மனு அளிக்க முடியாமல் பொதுமக்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

ஈரோட்டில் அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் இணையதள மையங்கள் இயங்காததால், வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி)கோரிக்கை மனுக்களை அனுப்ப முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில், புஞ்சை கிளாம்பாடி, நஞ்சை கிளாம்பாடி, ஊஞ்சலூர், கொளத்துப்பாளையம், நஞ்சை கொளாநல்லி, புஞ்சை கொளாநல்லி, பாசூர் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 1430-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வரும் 29-ம் தேதி வரை நடக்கவுள்ளது. வருவாய் தீர்வாயத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் இணையவழியில் அல்லது இ-சேவை மையம் மூலமாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை URL:https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையசெயலியை பயன்படுத்தியோ அல்லது இ-சேவை மையங்களின் மூலமாவோ 31-ம் தேதி வரை மனுக்களைப் பதிவு செய்யலாம், என்றார்.

இ-சேவை செயல்படவில்லை

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மகளிர் திட்டம், கிராம குழுக்கள் சார்பில் மொத்தம் 325 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வந்தன. கரோனா ஊரடங்கு காரணமாக இவற்றில் பெரும்பாலானவை, தற்போது செயல்படுவதில்லை. இதனால், வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:

ஆண்டுதோறும் நடக்கும் வருவாய் தீர்வாயத்தில், வீட்டுமனைப்பட்டா, சிறு, குறு விவசாயி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை மற்றும் நிலப்பட்டா, நிலப்பரப்பளவில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களைக் கொடுத்து உடனடியாக தீர்வு பெற முடியும். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நேரில் மனு அளிக்க வர முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் இணையதள சேவை மையங்களும் செயல்படாததால், மனுக்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

இதுபோல, கரோனாவால் இறந்தவர்களுக்கான இறப்புச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை பெற முடியாத நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்களின் வீடுகளுக்கே சென்று இறப்புச்சான்றிதழ், வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச்செயலர் உத்தரவிட்டுள்ளார். அதன்பின்பும், ஈரோடு மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT