இரண்டாம் உலகப் போரில் பாசிசசக்திகளால் விளைந்த பேரழிவுகளை மக்களும் மாணவர்களும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் 1941 முதல் 1945 வரை ஹிட்லரின் ஜெர்மனிக்கு எதிரான போரில் அன்றைய சோவியத் ஒன்றியத்துக்கு இந்தியா எப்படியெல்லாம் ஆதரவளித்தது என்பதை விளக்கும் வகையில் எல்.வி.மித்ரோகின் ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் தி சோவியத் யூனியன்’ என்னும் நூலை எழுதியுள்ளார். இது கடந்த ஆண்டு ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது திரைப்பட இயக்குநரும் இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பு நிறுவனமான ஆர்.யு.ஆர்.ஓ. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான கே.ராஜேஷ்வர் ‘பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு’ (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு) என்கிற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்திய-ரஷ்யதொழில்-வர்த்தக சபையும் சென்னை ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து இந்த நூலின் இணையவழி வெளியீட்டு விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.
நூலை வெளியிட்டுப் பேசிய. நீதியரசர் சந்துரு, “இரண்டாம் உலகப் போர் பற்றி நம் பள்ளிப் பாடநூல்களில் ஒன்றிரண்டு பத்திகளே இடம்பெற்றுள்ளன. அதோடு போர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால் போரை நிறுத்த வேண்டுமென்றால் போரைத் தொடங்கும் சக்திகளைத் தடுக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான பாசிச சக்திகளைத் தோற்கடித்ததில் சோவியத் ஒன்றியத்தின் தியாகங்கள், ஆற்றிய பங்களிப்பையும் அதற்கு இந்தியாவின் ஆதரவையும் இந்த நூல் விரிவாக பதிவுசெய்கிறது. ஹிட்லரின் புகைப்படத்துக்கு பெருமையுடன் வணக்கம் தெரிவிக்கும் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றும் இளைஞர்களும் அதிகரித்துவிட்டனர்.
இந்தச் சூழலில் ஹிட்லர், அவரது நாஸிசம், பாசிசம் போன்ற கொள்கைகள் எத்தகைய பேரழிவுகளை நிகழ்த்தியுள்ளன என்பது மக்களுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.
நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனரும் தலைமை இயக்குநருமான ஏ.சிவதாணுப் பிள்ளை “ரஷ்யாவுடனான தொடர்பையும் நட்பையும் பேணுவது இந்தியாவுக்கு நன்மை பயக்கும்” என்றார்.
ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநர் கென்னடி ராகலீவ், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பாடகரும் மருத்துவருமான சீர்காழி சிவசிதம்பரம், இந்தோ-ரஷ்ய கலாச்சாரம் - நட்புறவு அமைப்பின் செயலர் கீதா தாமோதரன், இந்திய - ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் பி.தங்கப்பன் உள்ளிட்டோர் பேசினர்.