அரசுப் பள்ளிக்கு அருகே மதுக்கடை திறப்பைக் கண்டித்து, அக்கடையின் ஷட்டரை இழுத்துப் பூட்டுப் போட்டு இன்று நடந்த போராட்டம் | படம்: எம்.சாம்ராஜ். 
தமிழகம்

புதுச்சேரியில் அரசுப் பள்ளி அருகே மதுக்கடை திறப்பைக் கண்டித்துப் பூட்டுப் போடும் போராட்டம்: தடுப்புக் கட்டைகளை அகற்றி வீசி மறியல்

செ. ஞானபிரகாஷ்

அரசுப் பள்ளி அருகே மதுக்கடை திறப்பைக் கண்டித்துப் பூட்டுப் போடும் போராட்டம் இன்று நடந்தது. இதில் கடையின் ஷட்டரை மூடியவர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுவை பழைய சட்டக்கல்லூரி அருகே புதிதாக மதுபானக் கடை அமைக்க கலால்துறை அனுமதி அளித்துள்ளது. நகரப் பகுதியில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளி, குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழர் களம் அமைப்பு சார்பில் மதுபான கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே தமிழர் களம் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

தமிழர் களம் அழகர் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகம் அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் நாராயணசாமி, அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், தமிழ் எழுத்தாளர் கழகம் தமிழ் நெஞ்சன், தமிழ் தேசிய இயக்கம் வேல்சாமி, தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன் மற்றும் பலர் பங்கேற்றனர். அங்கிருந்து கண்டன கோஷத்துடன் மதுபானக் கடையை நெருங்கி, பூட்டுப் போட முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுபானக் கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். பின்னர் மதுக்கடையில் வரிசையாக வரக் கட்டியிருந்த கட்டைகளை அங்கிருந்து எறிந்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். போராட்டம் காரணமாக புஸ்ஸி வீதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT