தமிழகம்

எழுத்தாளர் ரமேஷனுக்கு குமாரபுரத்தில் நினைவேந்தல்; திருக்குறள், சிலப்பதிகாரத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்

எல்.மோகன்

சாகித்ய அகாடமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளர் ரமேஷன் நாயருக்கு, அவரது சொந்த ஊரான தக்கலை அருகே உள்ள குமாரபுரத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ரமேஷன் நாயர். 1948 மே 3-ம் தேதி பிறந்த அவர் கரோனா தொற்றால் தனது 73ஆவது வயதில் கடந்த 18-ம் தேதி மரணமடைந்தார். அவர் பிறந்த குமாரபுரம் வீட்டு அருகாமையில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை அமுதசுரபி இலக்கிய இயக்கம், கன்னியாகுமரி மலையாள அட்சரலோகம் அமைப்புகள் இணைந்து நடத்தின. நிகழ்ச்சிக்கு அட்சரலோகம் அமைப்பின் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையேற்றார். கவிஞர் குமரி ஆதவன் நினைவேந்தல் உரை வழங்கினார். இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.

கவிஞர் ரமேஷன், மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இசை படித்தார். இந்து கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மனைவி ரெமா. மகன் மனு ரமேஷன் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளராக உள்ளார். கவிஞரின் முதல் கவிதை நூல் "கன்னிப் பூக்கள்" 1966-ல் வெளியானது.

கவிஞர் ரமேஷன், அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். எழுத்து ஆர்வம் காரணமாக விருப்ப ஓய்வுபெற்று, தீவிர இலக்கியப் பணியில் இறங்கினார். சுமார் 50 புத்தகங்களை மலையாள இலக்கியத்திற்குத் தந்தவர். 1985-ல் "பத்தாமுதயம்" திரைப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதி திரையுலகிற்கு அறிமுகமானார். புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன் இசைக்குத் தொடக்கக் காலத்தில் பாடல்கள் எழுதினார். பின்னர் மலையாளத்தின் பல இசையமைப்பாளர்களோடும் பயணித்தார். இளையராஜா இசைக்குப் பாடல்கள் எழுதியது மறக்கமுடியாத அனுபவம் என்பார். இதுவரை 165 திரைப்படங்களில் 650-க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். 2000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். தனி ஆல்பங்களில் சுமார் 800 பாடல்கள் வந்துள்ளன.

சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் பாடல்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்தார். அதற்காகக் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் (1-1-2000) அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால் பாராட்டும் பரிசும் பெற்றார். கருணாநிதியோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து, அவரின் "தென்பாண்டி சிங்கம்" நூலையும் மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.

இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை 2018இல் 'குருபவுர்ணமி' நூலுக்காகப் பெற்றார். கேரள அரசின் மாநில விருதையும், சிறந்த திரைப்படப் பாடலுக்காக விருதையும், பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளையும் பெற்றவர். விவேகானந்தர் குறித்த காவியத்தை எழுதத் தொடங்கியிருந்தார். கம்பராமாயணம் மலையாள மொழிபெயர்ப்புப் பணியையும் தொடங்கியிருந்தார். இதற்கிடையேதான் கரோனாவால் கவிஞர் ரமேஷன் உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT