சென்னை, செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பெரம்பூரை அடுத்த செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் நிலத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை முறைகேடு செய்து சிலர் பட்டா பெற்றுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்தார்.
மேலும், அந்த நிலத்தின் பேரில் சிண்டிகேட் வங்கியில் சுமார் 9 கோடி ரூபாய் வரை கடன் பெற்று அதனைச் செலுத்தாததால் தற்போது அந்த நிலம் ஏலத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அரசுடைமையாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலம் மற்றும் நீர்நிலைப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.