தமிழகம்

வெப்பச் சலனம்; 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை- வானிலை ஆய்வு மையம்  

செய்திப்பிரிவு

வெப்பச் சலனத்தின் காரணமாகத் தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 24) சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 25

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஜூன் 26

தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

அதனை அடுத்த 24 மணி நேரத்தில் (ஜூன் 25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்

ஜூன் 24 மற்றும் ஜூன் 25

ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 25 மற்றும் ஜூன் 26

தென்கிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

அரபிக் கடல் பகுதிகள்

ஜூன் 24 முதல் 28 வரை

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’’.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT