கரோனா தொற்றைக் குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை விற்பனைக்குக் கொண்டுவரக் கோரிய மனுவுக்கு நாளை விளக்கமளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட பவுடர் வடிவிலான கரோனா மருந்தான 2-டிஜி, அனைத்து உருமாறிய வகை கரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து, டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய கரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் அவசர காலப் பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, கடந்த மாதம் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. பவுடர் வடிவிலான இந்த மருந்தைத் தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம் எனவும், இதனால் கரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடிவதாகவும், நோயாளிகள் விரைவில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மருந்தைச் சந்தைக்குக் கொண்டுவரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதியளித்துள்ளது. இதை மத்திய அமைச்சர், கடந்த மே மாதமே, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார்.
தினந்தோறும் கரோனா மரணங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த மருந்தை விரைந்து விற்பனைக்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறேன்” என வாதிட்டார்.
இதையடுத்து, கரோனா தொற்றைக் குணப்படுத்த உலக நாடுகளின் விஞ்ஞானிகள், மருந்து கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள மருந்தை, பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதியளித்து, விற்பனைக்குக் கொண்டுவந்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனு குறித்து நாளை விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (ஜூன் 25) ஒத்தி வைத்தனர்.