ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

குவைத் செல்பவர்களுக்கு தடுப்பூசியின் பெயரை தெளிவுப்படுத்தி சான்று வழங்குக: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இருந்து குவைத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் திரும்பவும் பணிக்கு தங்கு தடையின்றி செல்ல தடுப்பூசியின் பெயரை முழுமையாக தெளிவுப்படுத்தி மத்திய அரசு சான்று வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் இருந்து குவைத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்றின் காரணமாக, தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். உலகளவில் தற்போது கரோனா தொற்று குறைந்த காரணத்தால், அவர்கள் மீண்டும் பணிபுரிய குவைத் திரும்புவதற்கான ஆயத்தப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

தற்போது குவைத் நாட்டுக்கு வருபவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குவைத் நாட்டில் கோவிஷீல்ட் அங்கிகீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றாகும். ஆனால், அது அந்நாட்டில் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி கோவிஷீல்ட் என்ற பெயரைக் கொண்டிருப்பதால், இது குவைத் நாட்டால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், தமிழகத்தில் இருந்து குவைத் திரும்பும் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அதனால், இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் - ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி என்று குறிப்பிட்டு சான்று அளித்தால், தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களில் இருந்தும் அவர்கள் திரும்பவும் குவைத் செல்ல ஏதுவாக இருக்கும்.

மத்திய அரசும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகமும் அதிகாரிகளும் ஆலோசனை செய்து, அவர்களுக்கு உரிய சான்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT