தமிழகம்

போலீஸார் தாக்கியதில் வியாபாரி மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

போலீஸார் தாக்கியதில் சேலம் வியாபாரி மரணமடைந்த சம்பவத்தில் தாமாக முன்வந்து (suo-motu) வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம் சரக டிஐஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊரடங்கில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சேலம் மாவட்டமும் அடங்கும். இங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் போலீஸார் சேலம் மாவட்டத்திற்குள் மது கடத்தாமல் இருக்க சோதனைச் சாவடி அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (40). வியாபாரியான இவர், இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் முருகேசனும் அவரது நண்பர்கள் சங்கர், உமாபதி ஆகியோரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்திய நிலையில் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று தங்களது கிராமத்துக்குத் திரும்பினர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மது அருந்திய நிலையில் வந்த அவர்களை, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்கள் மது பாட்டில்களை எதையும் கடத்தி வந்துள்ளனரா என சோதனை நடத்தினர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகேசனை எஸ்.எஸ்.ஐ பெரியசாமி மற்றும் சில போலீஸார் தாக்கியுள்ளனர். மது போதையில் இருந்த முருகேசனை, எஸ்.எஸ்.ஐ பெரியசாமி, லத்தியால் கண்மூடித்தனமாகத் தாக்கியதும், அதைத் தடுக்க நண்பர்கள் கெஞ்சியதும், சாலையில் முருகேசன் மயங்கி விழுந்தபின் தாக்குதல் நின்றது. இதை ஒரு காவலர் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்வது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ. தாக்கியதில் சாலையிலேயே மயங்கிக் கிடந்த முருகேசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடல்நிலை மோசமடைந்ததால், இன்று (புதன்கிழமை) அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது‌ பரிதாபமாக உயிரிழந்தார்

போலீஸார் தாக்கி வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் பெரிதானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் விசாரணை நடத்தினார். பின்னர் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு எஸ்.எஸ்.ஐ பெரியசாமி கைது செய்யப்பட்டார். மேலும் 2 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் தாக்கியதில் சேலம் வியாபாரி மரணமடைந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து (suo-motu) வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், வியாபாரி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சேலம் சரக டிஐஜி மகேஷ்வரி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT