சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரியிடம் நூதன முறையில் செயலியைப் பதிவிறக்கம் செய்யவைத்து வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாயை மர்ம மனிதர்கள் அபகரித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி புகார் அளித்துள்ளார்.
சென்னை, மந்தைவெளியில் வசிக்கும் வருமான வரித்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றும் அதிகாரி ஒருவர், கடந்த 14ஆம் தேதி ஆன்லைன் மூலமாக ஸ்னாப் டீலில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டுக்கு வந்துள்ளன. அதை சோதித்தபோது அதன் தரம் தாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றபடி இல்லை, தரம் சரியாக இல்லை என்பதால் துணை ஆணையர் அப்பொருட்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
அவர் திருப்பி அனுப்பிய சிறிது நேரம் கழித்து 63526 25717 என்ற எண்ணில் இருந்து அவருக்கு போன் வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர்கள் பொருட்களைத் திருப்பி அனுப்பியதால் பொருளுக்கான பணத்தைத் திருப்பித் தருவது சம்பந்தமாக குயிக் சர்வீஸ் (quick service) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லியுள்ளனர்.
அதிகாரியும் அவர்கள் கூறியபடி அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார். அவர் பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில் அந்தச் செயலியின் (App) மீது சந்தேகம் வர அதைத் தன் செல்போனில் இருந்து உடனே நீக்க முயன்றுள்ளார். ஆனால், அதை நீக்க முடியவில்லை, ஆனால், அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு தவணையாக ரூ.9,999 + 9,999 என மொத்தம் 19,998 எடுத்துவிட்டதாகக் குறுந்தகவல் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனக்கு போன் செய்த நம்பருக்கு போன்செய்தபோது அதை யாரும் எடுக்கவில்லை.
இதுகுறித்து நேற்றிரவு அபிராமபுரம் காவல் நிலையத்தில் துணை ஆணையர் புகார் அளித்ததை அடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.
ஸ்னாப் டீலில் அதிகாரி பொருட்களை வாங்கியது, அவர் அதைத் திருப்பி அனுப்பியதும் பணம் பறிக்கும் கும்பலுக்கு எப்படித் தெரிந்தது, இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேவையற்ற செயலிகளை, அதிலும் கூகுள் ப்ளே ஸ்டோர் தவிர வெளியில் எந்தச் செயலியையும் பதிவிறக்கம் செய்வதால் அதன் மூலம் நமது தகவல்கள் திருடப்பட்டுப் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, தேவையற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தேவையற்ற வகையில் பாஸ்வேர்ட், யூசர் ஐடி, ஓடிபி போன்றவற்றைக் கேட்கும் நபர்களுக்கு வழங்கும் விஷயத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.