திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெட்ரோல், டீசல் மீதான வரி எப்போது குறைக்கப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகத் தெரிவித்திருந்தது. பின்னர் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்தது முதல் கரோனா தடுப்புப் பணியில் திமுக கவனம் செலுத்திவருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4000 நிவாரணம் வழங்கி வருகின்றது.
இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ''2006-11ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த திமுக 3 முறை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. ஆனால் 2014ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த பெட்ரோல் மீதான செஸ் வரி 9 ரூபாயாக இருந்ததைக் குறிப்பிட்டு செஸ் வரியை 28% லிருந்து 30% ஆக உயர்த்தியது.
2014ஆம் ஆண்டு பாஜக பொறுப்பேற்றபின்தான் 9.48% ஆக இருந்த செஸ் வரியை 21.48% ஆக உயர்த்தியதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம். வரும் வரி வருவாயில் 4% மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.
மீதி 96% வரி வருவாயை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. தமிழகத்தில் தற்போதுள்ள நிதிநிலைச் சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கமுடியாது. நிதிநிலைச் சூழல் சீரடைந்தவுடன் உடனடியாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.