ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசும் ஒலிப்பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்பி கார்த்திக் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாணவியின் தரப்பிலும் முதுகுளத்தூர் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, கூடுதல் எஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையில் விசாரணை நடந்தது.
இதில், அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியரான முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹபீப் முகம்மது (36) என்பவர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார்.
அப்போது மாணவிகளின் மொபைல் எண்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதில் தனது பள்ளி மாணவி ஒருவரிடம் அவர் ஆபாசமாக பேசி தொல்லை தந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், ஹபீப் முகம்மது மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர். வேறு மாணவிகளிடமும் இவர் தவறாகப் பேசியுள்ளாரா, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என விசாரிக்கின்றனர்.