தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், மோட்டார் வாகன விபத்துவழக்குகளில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ரூ.1.50 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் 3 குழுக்களை நியமித்தது. இந்த குழுக்கள் அளித்த அறிக்கையில், ஆவணங்களை முறையாக பராமரிக்காததால் இதுபோல மோசடிகள் நடந்துள்ளன.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகை, நிரந்தர வைப்பீடுகள் குறித்த முறையான விவரங்கள் இல்லை. வழக்குஎண்களைக் குறிப்பிடாமல் இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களும், போக்குவரத்துக் கழகங்களும் செலுத்தியுள்ளன. பல வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலம் முழுவதும் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களின் ஆவணங்களை சரிபார்க்க அந்தந்த மாவட்ட நீதிபதிகளை நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தலைமை நோடல் அதிகாரியாக உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளர் சேதுராமனை நியமித்த நீதிபதிகள், இழப்பீட்டுத் தொகையை செலுத்தும்போது வழக்கு எண், இழப்பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த தேதி போன்ற விவரங்களை தர வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 2-க்கு தள்ளிவைத்தனர்.