மாவட்ட அளவில் பல்வேறு அரசு நிலங்களை ஆக்கிரமித்து பலர் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலர்கள் விதிகளை கவனிக்காமலும், பின்பற்றாமலும் `வீட்டு வரி ரசீது' வழங்கி விடுகின்றனர்.
சட்ட விதிகளை பின்பற்றாமல் ஊராட்சி செயலர்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுடன் கைகோர்த்து கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கும் வீட்டு வரி ரசீது கொடுக்கின்றனர். எனவே, வீட்டு வரி ரசீது வழங்கும் போது அதிகாரிகளை நியமித்து, வீடு கட்டியுள்ள நிலத்தின் பத்திரங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு இன்றி, உரிய விதிப்படி கட்டிய வீடுகளுக்கு மட்டுமே வீட்டு வரி ரசீது வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அப்போதுதான் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி ஆக்கிரமிக்கும் செயலை கட்டுக்குள் வைக்க முடியும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அரசு புறம்போக்கு நிலத்தில் மின் இணைப்பு வழங்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், ஊராட்சி செயலர்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுடன் கைகோர்த்துக் கொண்டும் லஞ்சம் பெற்றுக்கொண்டும் வீட்டு வரி ரசீது வழங்குகின்றனர். இந்த ரசீதை பயன்படுத்தி சிலர் மின் இணைப்பையும் பெற்றுக் கொள்கின்றனர்.
வருவாய் துறையினர் மின் இணைப்பு வழங்கக் கூடாது என மின் வாரியத்திடம் தெரிவித்தும் அதையும் மீறி மின்வாரியத்தில் மின் இணைப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த ஆவணங்களை வைத்துக் கொண்டு பட்டா வேண்டும் என்று கோரி போராட்டங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. தற்போது அரசு திட்டங்களை செயல்படுத்த போதிய நிலம் இல்லாமல் அரசு திணறி வருகிறது.
எனவே ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க புறம்போக்கு நிலங்களுக்கு வீட்டு வரி, மின் இணைப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும். வருவாய்த் துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.