தடங்கலின்றி ஐந்தாண்டுகள் புதுச்சேரியில் ஆட்சி நடக்க பேரவைத் தலைவர் அறையில் சிவனடியார்கள் சிறப்புப் பூஜை செய்தனர். மேலும், பேரவைத் தலைவர் செல்வத்தை இருக்கையில் அமரவைத்து, மந்திரங்களை ஓதி 'கருங்காலி' கோல்களைக் கொடுத்தனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் முதல்வர் மற்றும் பேரவைத் தலைவர் மட்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்னும் அமைச்சரவை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல் இந்தக் கூட்டணிக் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரியில் எந்தவிதத் தடங்கலுமின்றி, அடுத்த 5 வருடம் சிறப்பான முறையில் ஆட்சி நடத்திட வேண்டி சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் அறையில் சிறப்புப் பூஜைகள் இன்று நடைபெற்றன. திருவண்ணாமலை மற்றும் பழனியில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், சிறப்புப் பூஜை செய்து, பேரவைத் தலைவர் செல்வத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு 2 'கருங்காலி' கோல்களை வழங்கினர். இதனைப் புதுச்சேரி சட்டப்பேரவையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வியப்புடன் பார்த்தனர்.
'கருங்காலி' கோல்கள் தொடர்பாக பேரவைத் தலைவர் தரப்பில் விசாரித்தபோது, 'கருங்காலி கோல்' உடன் வைத்திருந்தால் திருஷ்டி, சூனியம் தோஷங்கள் நீங்கும். அதை தினமும் பூசை செய்து பயன்படுத்தக் கோரி சிவனடியார்கள் தந்துள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.