படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரையில் வெளிநாடு செல்வோருக்காக பிரத்யேக தடுப்பூசி முகாம்: கோவிஷீல்டு 2வது டோஸ் 28வது நாளில் போடலாம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சி தெற்கு வாசல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடு செல்வோருக்காக பிரத்யேகமாக கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி 28 நாட்களில் போடப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வோர் பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசியே போடுகின்றனர். ஏனெனில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பெரும்பாலான நாடுகளில் அந்த நாட்டு அரசுகள் அனுமதித்துள்ளன.

கோவேக்சின் தடுப்பூசி இன்னும், பெரியளவில் வெளிநாடுகளில் அனுமதிக்கப்படவில்லை. அதனால், வெளிநாடுகள் செல்வோர் தற்போது ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி முதல் டோஸ் போடுவோருக்கு, இந்தியாவில் தற்போது 84 நாட்கள் கழித்துதான் இரண்டாவது டோஸ் போடப்படுகிறது.

அதனால், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் வெளிநாடுகளுக்கு செல்வோர் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த சிக்கலை தீர்க்கும்வகையில் மத்திய அரசு வெளிநாடு செல்வோருக்காக ‘கோவிஷீல்டு’ முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி 28 நாளில் போடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் இதற்காக பிரத்தியேக ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி முகாம் போடப்படுகிறது.

மதுரையில் தெற்குவாசல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதில், கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டுக் கொண்ட வெளிநாடு செல்வோர் இரண்டாவது தடுப்பூசியை 28 நாளில் போட்டு பனயடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வேலை நிமித்தமாக வெளிநாடு செல்கிறவர்கள், கல்விக்காக செல்கிறவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் 28 நாளில் இந்த முகாமில் செலுத்தப்படுகிறது.

இதற்காக தடுப்பூசி போட வருகிறவர்கள், இதற்கான ஆவணங்களுடன் இந்த முகாமில் வந்து பயன் பெறலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT