தமிழகம்

காணி பழங்குடியினருக்கு கரோனா தடுப்பூசி முகாம்: நெல்லை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் காரையார் பகுதியிலுள்ள காணி பழங்குடியினருக்கான கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.

இங்குள்ள காணி பழங்குடியினருக்கு நபார்டு வங்கி நிதி உதவியுடன், சரக்கு வாகனத்தை ஆட்சியர் வழங்கினார். இதை தொடர்ந்து காணி பழங்குடியினருக்கான தடுப்பூசி முகாமை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

காரையார் பகுதியில் சின்னமயிலான், பெரியமயிலான் மற்றும் இஞ்சிகுழி ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள காணிபழங்குடியினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் வைக்கப்பட்டுள்ளது. முதலில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் காணி பழங்குடியின மக்களுக்கு தானாகவே முன்வந்து தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள, 200 காணி பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நபார்டு வங்கியின் நிதியுதவிடன் காணி மக்கள் தயாரிக்கின்ற தேன், உள்ளிட்ட அனைத்து பொருட்களும், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதற்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான சரக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இஞ்சிகுழி பகுதியில் உள்ள 9 குடும்பங்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பில், 100 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் அடிப்படை வசதிகள் வழஙகப்பட்டுள்ளது. காணி மக்கள் தயாரிக்க கூடிய உணவு பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நபார்டு திட்டம் மூலம், ஆர்கானிக் சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருநெல்வேலியில் புதிய பேரூந்து நிலையம் அருகில் மகளிர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் ஒரு பகுதியாக காணி மக்களுக்கு தனியாக ஒதுக்கப்பட்டு கண்காட்சி மற்றும் விற்பனைக்காக இன்னும் ஒரு வாரத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

காணி மக்களின் வாழ்க்கை வரலாற்றினை குறிப்பாக கலாச்சாரம், நடனம், உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஆவணங்களாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், தமிழ்நாடு தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு, பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக 5 பெண்களுக்கு சுழல் நிதியாக, தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் கௌதம், நபார்டு வங்கி மேலாளர் சலீமா, துணை இயக்குநர் சுகாதார பணிகள் வரதராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வே.தியாகராஜன், மாவட்ட சித்த அலுவலர் உஷாராணி, விக்ரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் பழங்குடிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சுற்றுலாத் தலங்களில் வசிப்போருக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT