விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடையில் 14 வகையான நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் மோசடியைக் கண்டித்து பொதுமக்கள் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் வீடு உள்ளது. இதன் அருகே ரேஷன் கடை ஒன்றும் இயங்கி வருகிறது.
இக்கடையில் மகேஸ்வரி என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இங்கு, அப்பகுதியில் உள்ள சாமியார் கிணற்றுத்தெரு, ராமமூர்த்தி சாலை, வீராசாமி தெரு, ராஜாக்கள் தெரு, சின்னப்பள்ளிவாசல் தெரு, அள்ளித்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் பெருகின்றனர்.
கரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதை கடந்த 15ம் தேதி அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். அதைத்தொடர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ராமமூர்த்தி சாலையில் வருவாய்த்துறை அமைச்சரின் வீடு அருகே உள்ள ரேஷன் கடையில் 14 வகையான மளிகைத் தொகுப்பில் 12 வகையான பொருள்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏதேனும் இரு பொருட்கள எண்ணிக்கையில் குறைந்ததால் இதுபற்றி பொதுமக்கள் ரேஷன்கடையில் கேட்டபோது முறையாக பதில் அளிக்கப்படவில்லை. அதோடு, குடும்ப அட்டைதாரர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அரசு வழங்கிய மளிகைத் தொகுப்பை முழுமையாக வழங்காமல் சில பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டு தருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அரசுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்கும் வகையில் ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் செயல்படுவதாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் திமுக நிர்வாகியுமான பாட்ஷா ஆறுமும் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ரேசன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.