அமைச்சர் தங்கம் தென்னரசு: கோப்புப்படம் 
தமிழகம்

15 எண்ணெய்க் கிணறுகள்; ஓஎன்ஜிசி விண்ணப்பம் நிராகரிப்பு; சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்த ஓஎன்ஜிசி-யின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு 10 இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களிலும் கிணறு அமைக்க அனுமதி கேட்டு, தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த ஜூன் 16 அன்று கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்பதால், சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பத்தில் ஓஎன்ஜிசி குறிப்பிட்டிருந்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதில், பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்எல்ஏ-க்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பேசினார்.

அதற்கு, பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹைட்ரோகார்பன் புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்தது எனவும், அந்த விண்ணப்பம், கடந்த சில நாட்களுக்கு முன் நிராகரிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

தஞ்சை, நாகை திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியில்லை எனவும், இந்த மாவட்டஙக்ளுக்கு வெளியே எண்ணெய் கிணறுகள் அமைக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும், அக்குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்க அனுமதியில்லை என கூறிய அவர், இதுபோன்று மண் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக, தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமப்பிக்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

,

SCROLL FOR NEXT